ஸ்ரீராமனின் புகழ்பரப்பும் ராமகாதையின் விளக்கம்

ஸ்ரீராமனின் புகழ்பரப்பும் கம்பராமாயணம் 10500 பாடல்களைக் கொண்டது. இதை எழுதியவர் கம்பர். மயிலாடுதுறை அருகிலுள்ள திருவழுந்தூர் இவரது ஊர். இவர் தன் காவியத்திற்கு “ராமகாதை’ என பெயரிட்டதாக ஒரு சாராரும், “ராமாவதாரம்’ என்று பெயரிட்டதாக ஒரு சாராரும் கூறுகின்றனர்.

பிற்காலத்தில் இது அதை எழுதிய கம்பரின் பெயரால் “கம்பராமாயணம்’ என்றாயிற்று. “ராமன்+ அயனம்’ என்று இதைப் பிரிப்பர். “ராமன் காட்டிய வழி’ என்பது இதற்குப் பொருள். இந்த நூலை கம்ப சித்திரம், கம்ப நாடகம் என்று பெயரிட்டு அழைப்பவர்களும் உண்டு. கம்பர், குலோத்துங்க சோழமன்னனின் அவைக்களப் புலவராக இருந்தார்.

இவரை திருவெண்ணெய்நல்லூரில் வசித்த சடையப்ப வள்ளல் ஆதரித்தார். இதற்கு நன்றிக்கடனாக கம்பர் ராமாயணத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை அவரைப் புகழ்ந்து பாடியுள்ளார். “”இலியட், இழந்த சொர்க்கம் ஆகிய வெளிநாட்டு நூல்களை மட்டுமல்லாது, வால்மீகி எழுதிய ராமாயணத்தையும் விடவும் கம்பராமாயணம் உயர்ந்தது,” என்று வ.வே.சு.ஐயர் பாராட்டியுள்ளார்.

கம்பராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றினார். இவரது மகன் தான் காதலில் தோற்றாலும் இன்றும் நம் நெஞ்சங்களில் வாழும் அம்பிகாபதி. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நாட்டரசன்கோட்டையில் கம்பர் இயற்கை எய்தினார். இவர் ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி, சடகோப அந்தாதி ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

கம்பராமாயணத்தின் ஏழாவது காண்டமான உத்தரகாண்டத்தை சரஸ்வதி தலமான கூத்தனூரில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் எழுதினார். 17 படலங்களையும், 1510 பாடல்களையும் கொண்டது இந்த நூல்.